மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அதை ெபாதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு வைப்பார் கிராமத்தில் இருந்து புளியங்குளம் வரை 14 கிலோ மீட்டர் தூரமும், பூஞ்சிட்டு வண்டிக்கு வைப்பார் கிராமத்தில் இருந்து குளத்தூர் வரை 12 கிலோ மீட்டர் தூரமும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் 16 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு போட்டியில் 18 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. போட்டியை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் பங்கேற்ற காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதை வழிநெடுகிலும் சாலையோரங்களில் நின்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை அவனியாபுரம் மோகன்சாமி குமார் மாட்டு வண்டி முதலிடம் பெற்றது. 2-வது இடத்தை தூத்துக்குடி சண்முகபுரம் மெடிக்கல் மாட்டு வண்டியும், 3-வது இடத்தை கடம்பூர் இளைய ஜமீன்தார் மாட்டு வண்டியும் பிடித்தன. பூஞ்சிட்டு போட்டியில் தூத்துக்குடி சண்முகபுரம் விஜயகுமார் மெடிக்கல் மாட்டு வண்டி முதலிடமும், நெல்லை சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி 2-வது இடமும், கடம்பூர் கருணாகர ராஜா மாட்டு வண்டி 3-வது இடமும் பெற்றன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரொக்கப்பணம், எல்.இ.டி. டி.வி. உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற ஜோடி மாடுகளுக்கு மரியாதையும் செய்யப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜகம்பள மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story