நூதன முறையில் நகை திருடிய வாலிபர் சிக்கினார்


நூதன முறையில் நகை திருடிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 4 Jan 2022 8:15 PM IST (Updated: 4 Jan 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் நூதன முறையில் 5 பவுன் திருடிய வாலிபர் போலீசில் சிக்கினார்.

மதுரை, 
மதுரையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் நூதன முறையில் 5 பவுன் திருடிய வாலிபர் போலீசில் சிக்கினார்.
ஜெராக்ஸ் கடை
மதுரை அழகப்பன் நகர், பண்ட் ஆபிஸ் காலனி, ருக்மணி தெருவை சேர்ந்தவர் மணிராஜா (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம் எதிரே ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு கணவன், மனைவி என கூறிக்கொண்டு 2 பேர் வந்துள்னர். அப்போது வீட்டில் மணிராஜாவின் 2 குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர். அவர்களிடம் உனது தந்தைக்கு தெரிந்தவர்கள் நாங்கள் தவணை நோட்டில் கையெழுத்து போட வேண்டும். ஆதலால் பீரோவில் இருக்கும் நோட்டை எடுத்து கொடுக்குமாறு உனது தந்தை கூறியுள்ளார் என்று குழந்தையிடம் தெரிவித்துள்ளார்.
உடனே குழந்தை மணிராஜாவிற்கு போன் செய்து தவணை நோட்டு கேட்டு 2 பேர் வந்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போனை அவர்களிடம் கொடுக்குமாறு தெரிவித்தார். போனை வாங்கியதும் அதனை ஆப் செய்து பீரோவில் இருந்து நோட்டை எடுத்து கையெழுத்து போட்டு விட்டு செல்கிறேன் என்று அந்த நபர் பேசியுள்ளார்
 நகை திருட்டு
அதன்பின்னர் குழந்தை பீரோவை திறந்து போது அங்கிருந்த நகை பெட்டியில் இருந்த 5 பவுன் நகையை திருடிக்கொண்டார். மேலும் அந்த பீரோவில் நோட்டு இல்லை என்றும் மற்றொரு பீரோவை திறக்குமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதற்கிடையே மணிராஜா மனைவியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அதற்குள் அந்த தம்பதி நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். அதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நரிமேடு பகுதியை சேர்ந்த சேக்தாவூத்தின் மகன் சையதுஅலி (30) அவரது மனைவி என்பது தெரியவந்தது.
வாலிபர் சிக்கினார்
அதைத்தொடர்ந்து போலீசார் நரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த சையதுஅலியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் போலீசாரிடம் சிக்கிய சையதுஅலி மீது மதுரை மட்டுமில்லாமல் நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் இதுபோன்று ஏராளமான வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story