ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் விற்பனைக்கு வந்ததாக புகார் தாசில்தார் விசாரணை


ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் விற்பனைக்கு வந்ததாக புகார் தாசில்தார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2022 9:24 PM IST (Updated: 4 Jan 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே கொள்முதல் நிலையத்துக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து நெல் விற்பனைக்கு வந்ததாக புகார் வந்ததை தொடர்ந்து தாசில்தார் கவிதா விசாரணை நடத்தினார்.

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே கொள்முதல் நிலையத்துக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து நெல் விற்பனைக்கு வந்ததாக புகார் வந்ததை தொடர்ந்து தாசில்தார் கவிதா விசாரணை நடத்தினார். 

கலெக்டருக்கு புகார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் ஊட்டியாணி பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு ஆந்திராவில் இருந்து நெல் விற்பனைக்கு வந்திருப்பதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலம் புகார் வந்தது. இதையடுத்து அவர் விசாரணை நடத்துமாறு கூத்தாநல்லூர் தாசில்தார் கவிதாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். 
அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு வெளியே மன்னார்குடி பைங்காநாடு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருடைய நெல் விற்பனைக்காக உலர வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

ஆவணங்கள்

மேலும் இந்த நெல் ஆடுதுறை 45 என்ற ரகத்தை சேர்ந்தது என்பதும், ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட நெல் இல்லை என்பதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட விவசாயியிடம் நெல்லுக்குரிய ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். 
ஊட்டியாணி நெல் கொள்முதல் நிலையத்துக்கு ஆந்திராவில் இருந்து நெல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து அங்கு வடபாதிமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story