கோவில்பட்டி ஷோரூமில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கோவில்பட்டி ஷோரூமில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் புதியம்புத்தூர் ராஜம்மாள் நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ராமமூர்த்தி (வயது 37) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஷோரூமில் உள்ள மோட்டார் சைக்கிள்களை கணக்கெடுத்தபோது, ரூ.1.22 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில், கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, புதிய மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு இலுப்பையூரணி, மேலத்தெருவை சேர்ந்த கோமதி பாண்டியன் மகன் மாரிமுத்து (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் கோவில்பட்டி ஷோரூமில் மோட்டார் சைக்கிள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த புதிய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story