அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின
திருமருகல் ஒன்றியத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. பாதிக்கப்பட்ட நிலங்களை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. பாதிக்கப்பட்ட நிலங்களை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சம்பா சாகுபடி
திருமருகல் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி, திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மழையால் நெற்பயிர்கள் அழுகின
கடந்த மாதம் ெபய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழை நின்றவுடன் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களுக்கு பூச்சி மருந்து மற்றும் உரமிடும் பணியில் ஈடுபட்டு வந்தோம். இந்த நிலையில் மீண்டும் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன.
ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கு மேல்செலவு செய்து நெற்பயிர்கள் நன்கு வளர்ந்திருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயிர்கள் மூளைத்தது
இதேபோல தொடர் மழையால் கீழ்வேளூர் ஒன்றியம் நெம்மேலி திருகண்ணங்குடி, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தது. இதில் தற்போது 400 ஏக்கர் நெற்பயிாகள் முளைக்க தொடங்கி விட்டது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story