புதுவையில் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுவையில் 85 நாட்களுக்கு பிறகு புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, ஜன.
புதுவையில் 85 நாட்களுக்கு பிறகு புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சரிந்த தொற்று
புதுவையில் கடந்த மே, ஜூன் மாதங்களில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று அதன்பிறகு வெகுவாக குறைந்தது. கடந்த சில மாதங்களாக 50-க்கு கீழே பாதிப்பு குறைந்து இருந்து வந்தது.
இதன் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் 26 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
தொடர் சிகிச்சை
அதாவது நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 66 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி 42 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு குறைந்து வந்த கொரோனா சுமார் 85 நாட்களுக்கு பிறகு அதிகபட்சமாக நேற்று 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 50 பேர், வீடுகளில் 164 பேர் என 214 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 7 பேர் குணமடைந்தனர்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி
புதுவையில் தொற்று பரவல் 1.93 சதவீதமாகவும், குணமடைவது 98.38 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 1,488 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 534 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 14 லட்சத்து 10 ஆயிரத்து 815 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. முதல் நாளில் புதுச்சேரி பகுதியில் 169 பேரும், காரைக்காலில் 115 பேரும், மாகியில் 30 பேரும், ஏனாமில் 140 பேரும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
Related Tags :
Next Story