தடுப்பூசி போட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கு தேர்வு


தடுப்பூசி போட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கு தேர்வு
x
தினத்தந்தி 4 Jan 2022 10:06 PM IST (Updated: 4 Jan 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி போட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கு தேர்வு நடத்தப்படும் என்றுஅமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல், கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் விதமாகவும், அரசு நலத்திட்டங்கள் மாணவர்களை முழுமையாக சென்றடைதல் குறித்தும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்தல், இல்லம் தேடி கல்வி திட்டப்பணிகள், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் ஆகியவை குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கூறினார். 

கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், மாவட்ட கலெக்டர் டி.மோகன், எம்.பி.க்கள் விஷ்ணுபிரசாத், அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார், சரவணன், ஜோதி, கிரி, பாலாஜி, இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் குப்புசாமி, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விழுப்புரம் கிருஷ்ணப்பிரியா, கடலூர் பூபதி மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடுதல் பஸ் வசதி

பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பழைய, மிக மோசமான நிலையில் இருக்கும் கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிக்க முடிவு செய்துள்ளோம். குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். 
பள்ளி மாணவர்களுக்கு தனி பஸ் வசதி கொண்டு வர வேண்டும் என்றால் அது மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் 48 ஆயிரம் பள்ளிகள் உள்ளது. இதை அமல்படுத்த வேண்டும் என்றால் 40 ஆயிரம் பஸ்களை இயக்க வேண்டும். இருந்தாலும் அந்தந்த வழித்தடத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நேரத்தில் எந்தந்த பஸ்கள் வருகிறதோ அதை பொறுத்து எந்தந்த பள்ளிகளுக்கு எப்படி அமல்படுத்தலாம் என்றும், தேவையான வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்தும் போக்குவரத்துத்துறை அமைச்சர், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்படும். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இதுகுறித்து விவாதிக்கப்படும்.

தடுப்பூசி போட்ட பிறகு தேர்வு

ஏற்கனவே 30 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை பாடத்திட்டங்களை குறைத்துள்ளோம். அதற்கு மேல் குறைப்பதாக இல்லை. 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு தேர்வு நடைபெறும். இல்லம் தேடி கல்வி என்ற மகத்தான திட்டத்தில் 20 பேர் கொண்ட குழுவாக மாணவர்களை அமர வைத்து செயல்படுத்தி வருகிறோம்.
ஒமைக்ரான் வைரசை பொறுத்தவரை கொரோனாவை விட பாதிப்பு இல்லை என்று சொன்னாலும் கூட பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அச்சம்தான் கொள்கின்றனர். அதையும் கருத்தில் கொண்டுதான் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை நடத்தி வருகிறோம். இத்திட்டத்திற்கு 1 லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரம் மையங்கள் தேவைப்படுகிறது. அதில் 80 ஆயிரம் மையங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 11 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் பயனடைகிறார்கள். அடுத்த மாதத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் மையங்களை தயார் செய்து விடுவோம். 

பாலியல் விழிப்புணர்வு பாடம்

பாடப்புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு குறித்து 2 அல்லது 3 பக்கங்களில் பாடங்கள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். தற்போதைய சூழலில் அதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரை குட் டச், பேட் டச் என்னவென்று தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் கொண்டு வந்தால் பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளை இன்னும் தைரியமாக, நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story