விபத்தில் காயமடைந்த குரங்கை காப்பாற்றிய என்ஜினீயர்
சின்னசேலம் அருகே விபத்தில் காயமடைந்த குரங்கை என்ஜினீயர் காப்பாற்றினாா்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த சேலம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பாகுறிச்சி, அனுமனந்தல் ஆகிய கிராம எல்லைப்பகுதியில் வி.கிருஷ்ணாபுரம் காப்புக்காடு உள்ளது. இங்குள்ள குரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் உணவு மற்றும் பழங்களை வழங்கி செல்கின்றனர். இதன்காரணமாக உணவுக்காக குரங்குகள் காப்புக்காட்டைவிட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிவதை காணமுடிகிறது. இந்த நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த ஒரு குரங்கின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அந்த குரங்கு சாலையோரத்தில் மயங்கி கிடந்தது. இதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற சின்னசேலம் அடுத்த வி.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த என்ஜினீயரான பிரபு (வயது 42) என்பவர் பார்த்தார். பின்னா் அந்த குரங்கை அங்கிருந்து தூக்கிச்சென்று அருகில் இருந்த குடிநீர் குழாய் பகுதிக்கு கொண்டு சென்று, அந்த குரங்குக்கு தண்ணீர் கொடுத்து, காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்தார். இதையடுத்து அந்த குரங்குக்கு மயக்கம் தெளிந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரபு அந்த குரங்கை காப்புக்காடு அருகே விட்டார். இதனை தொடர்ந்து அந்த குரங்கு மற்ற குரங்குகளோடு சேர்ந்து அங்கிருந்து சென்றது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விபத்தில் சிக்கி காயமடைந்த குரங்கை காப்பாற்றிய என்ஜினீயரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story