வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்திலும் புதிய பேருந்து நிலையங்கள்: ரூ.36 கோடியில், கடலூர் பஸ்நிலைய பணிகள் விரைவில் தொடங்கும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்தில் புதிய பஸ்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடலூரிடல் ரூ.36 கோடியில் செலவில் புதிய பஸ்நிலையத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அமைக்கர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் அய்யப்பன், வேல்முருகன், சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம்
அப்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, அதை உரமாக்க வேண்டும். இதற்காக இடம் இல்லாத பகுதிகளில் இடத்தை தேர்வு செய்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதை நோக்கி அலுவலர்கள் பயணிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
கூட்டத்தில் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினர். முடிவில் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
முன்னதாக அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுக்குடிநீர் திட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக நெய்வேலியில் இருந்து வரக்கூடிய தண்ணீரை எடுத்து ரூ.475 கோடி செலவில் 741 குடியிருப்புகளுக்கு, 5 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தினந்தோறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் அளிக்கும் திட்டத்தை ஆய்வு செய்தோம்.
சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.140 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்ட பணியையும் ஆய்வு செய்தோம். ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேவையான பணிகளை செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தோம்.
குப்பை கொட்டுவதில் பிரச்சினை
கடலூர் மாநகராட்சிக்கு குப்பை அள்ள 3 வாகனங்கள் உள்ளது. மேலும் 3 வாகனங்களை ஆணையாளர் கேட்டு இருக்கிறார். விரைவில் அதுவும் வழங்கப்படும். அனைத்து மாநகராட்சிகளிலும் குப்பை கொட்டுவதில் பெரும் பிரச்சினை உள்ளது. ஏனெனில் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக்கொட்டக்கூடாத நிலை உள்ளது.
அதனால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பயோ மைனிங் மூலம் மக்கும், மக்காத குப்பகைள் என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உடனடியாக உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடலூரில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு இந்த குறைகள் சரி செய்யப்படும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளையும் ஆய்வு செய்தோம். விடுப்பட்ட பகுதிகளில் ரூ.78 கோடியில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளும் தொடங்க இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 380 ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அவர்கள் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க 18.4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.36 கோடியில் வேலை ஆரம்பிக்க உள்ளது. விரைவில் அரசாணை வெளியிடப்படும். டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும். வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் ஆகிய இடங்களில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
அப்போது தி.மு.க. நகர செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் குணசேகரன், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மாணவரணி நடராஜன், கே.ஜி.எஸ். தினகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story