விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்


விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Jan 2022 11:39 PM IST (Updated: 4 Jan 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சீர்காழி:
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
சாலைமறியல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் செல்லப்பன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தின் போது விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் 2020-2021 ஆண்டு விடுபட்ட பயிர் காப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அரசு அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
22 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், ஜெயக்குமார், பிரபாகரன், கம்பதாசன் உள்பட 22 பேரை கைது செய்து, வாகனத்தில் அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம் - மயிலாடுதுறை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story