பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சென்றடைய வேண்டும்;அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை
பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
திருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு ஊராட்சியில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இது, அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை அறிந்து இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு திட்டங்களாக, மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது. மக்களின் தேவையை பூர்த்தி செய்து மக்களுக்காக ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் தமிழக முதல்-அமைச்சர். மக்களுக்காக 24 மணி நேரமும் பணியாற்றி கொண்டிருக்கிறார்.
கொரோனா இல்லாத...
தமிழக அரசின் சார்பாக 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் முதலிடம். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், முன்னாள் எம்.பி. வேணுகோபால், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story