அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஜல்லிக்கட்டு
அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
மதுரை,
அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
பொங்கல் தொகுப்பு
மதுரை ஊமச்சிக்குளம் செட்டிகுளம் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அனிஷ் சேகர் தலைமையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட அரிசி, பருப்பு, முந்திரி, திராட்சை, வெல்லம், கரும்பு மற்றும் மஞ்சள் பை உள்பட ரூ.505 மதிப்பிலான 21 வகையான பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 1,394 ரேஷன் கடைகளில் உள்ள 9 லட்சத்து 17 ஆயிரத்து 537 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் 1,718 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 19 ஆயிரத்து 255 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.46 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 775 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
நடவடிக்கை
அனைவரும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா 2-வது அலையின்போது சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாத்தார். அதே போல் வடகிழக்கு பருவமழையின் போதும் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீர்செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தற்போது கொரோனா நோய்தொற்றின் 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ஜல்லிக்கட்டு
கொரோனா பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் மற்றும் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story