அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு பிணம் வீச்சு


அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு பிணம் வீச்சு
x
தினத்தந்தி 5 Jan 2022 1:25 AM IST (Updated: 5 Jan 2022 1:42 PM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு பிணம் வீசப்பட்டு கிடந்தது. அந்த சிசுவை கொலை செய்தனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு 40 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு உள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த ஆஸ்பத்திரிக்கு சேரன்மாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூனியூர், காருக்குறிச்சி, புதுக்குடி, மேலப்புதுக்குடி, கிரியமாள்புரம், சக்திகுளம், சங்கன்திரடு உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த ஆஸ்பத்திரியில் உள்ள கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கடந்த சில நாட்களாக நிரம்பி வழிந்தது. நேற்று முன்தினம் இரவு தூய்மை பணியாளர்கள் அந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதில் ஒரு ஆண் சிசு பிணம் கிடந்ததை பார்த்து திடுக்கிட்டனர்.

இதுபற்றி சேரன்மாதேவி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த சிசு பிணம் மீட்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த சிசு பிறந்து சில நாட்களே இருக்கலாம் என கூறப்படுகிறது.

சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த ஏதோ ஒரு பெண் தான் இந்த சிசுவை வீசியிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் பிரசவமான பெண்களின் முகவரியை சேகரித்து வருகின்றனர். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

ஆஸ்பத்திரியில் பிரசவித்து இறந்த ஆண் சிசுவை கொண்டு வந்து கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றனரா? அல்லது கழிவுநீர் தொட்டியில் சிசுவை வீசிக்கொன்றனரா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த சிசுவின் தாய் பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.
ஆஸ்பத்திரி கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு பிணம் வீசப்பட்டு கிடந்த சம்பவம் சேரன்மாதேவி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story