ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி சாலை மறியல்
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாபநாசம்;
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
மழையால் பயிர்கள் பாதிப்பு
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் ஏராளமான விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இந்தநிலையில் கனமழையால் பயிர்களை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாபநாசம் ஒன்றியக்குழு சார்பில் பாபநாசம் அண்ணாசிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
50 பேர் கைது
மறியல் போராட்டத்துக்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் சாமி தர்மராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story