வாழப்பாடியில் சித்ரா எம்.எல்.ஏ. தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
வாழப்பாடியில் சித்ரா எம்.எல்.ஏ. தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
வாழப்பாடி:-
வாழப்பாடி அரசு பள்ளியில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு பெயர் வைப்பதில் எழுந்த பிரச்சினையால் சித்ரா எம்.எல்.ஏ. தர்ணா போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கலையரங்கம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், 2017-ம் ஆண்டு கலையரங்கம் அமைக்க ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த கலையரங்கம் கட்டப்பட்டு அதற்கு தற்போது கலைஞர் கலையரங்கம் என்று பெயரிடப்பட்டது.
இந்த நிலையில் அந்த கலையரங்கத்தின் முன்பு நேற்று திடீரென்று அ.தி.மு.க.வை சேர்ந்த சித்ரா எம்.எல்.ஏ. தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்கள் அந்த கலையரங்கத்துக்கு அம்மா கலையரங்கம் என பெயர் வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மிகப்பெரிய போராட்டம்
இதுகுறித்து சித்ரா எம்.எல்.ஏ. கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் போது, ஏற்காடு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவாக, அம்மா கலையரங்கம் அமைப்பதற்கு, ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தேன். இந்த கலையரங்கத்திற்கு புரட்சித்தலைவி அம்மா கலையரங்கம் என பெயர் சூட்டி வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கலையரங்கத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. சிவலிங்கம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் இடம்பெறவில்லை. எனவே அந்த கலையரங்கத்துக்கு அம்மா கலையரங்கம் என பெயர் சூட்ட வேண்டும். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் கல்வெட்டில் நிறுவ வேண்டும். தவறும்பட்சம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜ் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சித்ரா எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story