நெல்லில் குலைநோய் கட்டுப்படுத்தும் முறைகள்- வேளாண்மை அதிகாரி விளக்கம்


நெல்லில் குலைநோய் கட்டுப்படுத்தும் முறைகள்- வேளாண்மை அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 5 Jan 2022 3:14 AM IST (Updated: 5 Jan 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லில் குலைநோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி ரா.சரவணன் கூறியுள்ளார்.

ஈரோடு
நெல்லில் குலைநோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி ரா.சரவணன் கூறியுள்ளார். 
இதுகுறித்து டி.என்.பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரா.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குலைநோய்
குலைநோய் நெல்லில் 50-க்கும் மேற்பட்ட நோய்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்கள் பூஞ்சாணங்கள், பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகின்றன. குலைநோய் நாற்றங்காலிலும், நட்ட பயிரிலும் சேதத்தை ஏற்படுத்தும். நோயுள்ள நெற்பயிரில் இலைகளின் மேல் சிறிய பழுப்பு நிற புள்ளிகள் உண்டாகின்றன.
புள்ளிகள் பெரியதாகும் போது இரு பக்கங்களிலும் விரிவடைந்து கண் வடிவத்தை பெறுகின்றன. இதன் ஓரங்கள் பழுப்பு நிறமாகவும், உட்பகுதி சாம்பல் நிறமாகவும் காணப்படும். குலைநோய் பைரிகுலேரியா ஒரைசே என்ற பூசணத்தால் உண்டாகின்றன. இந்நோய் கிருமிகள் காற்றின் மூலமாகவும் விதை, நோயுற்ற வைக்கோல் மூலமாகவும் பரவும் தன்மையுடையது.
நோய் காரணிகள்
குலைநோய் கிருமிகள், இலைகளை மட்டுமில்லாமல்  தண்டு, நெற்கதிரையும் தாக்குகின்றன. நோய் பூசணம் தண்டின் கணுக்களை தாக்கும்போது கணுக்களின் திசுக்கள் அழுகி எளிதாக ஒடிவந்துவிடும். நோய் கதிரின் கழுத்து பகுதியை தாக்கும்போது பழுப்பு அல்லது கருப்பு நிறப்புள்ளிகள் உண்டாகின்றன. இதனால் அப்பகுதி அழுகி கதிரினை தாங்க முடியாமல் ஒடிந்துவிடும். இதனை கழுத்துக் குலைநோய் என்பர். பால்பிடிக்கும் முன் தாக்கப்பட்டால், மணிகள் பால் பிடிக்காமல் பதராகிவிடும்.
சேமிப்பு நெல் விதைகள் மற்றும் தாக்கப்பட்ட தூர்களில் இந்நோய் காரணி இருக்கும். பூசண இனவிருத்தி அமைப்புகள், வித்துக்கள் மூலம் அடுத்த பருவ நெற்பயிருக்கு இந்நோயை பரப்பும். பூசண வித்துக்களை காற்றின் மூலம் மற்ற நெல் பயிர்களுக்கு நீண்ட தூரம் வரை பரவும். கொத்துக்களாக உருவாகும் கொனீடியாக்கள் 2-4 இடைச்சுவருடன் அடிப்பரப்பு சற்று வீக்கமாக நுனியில் மெலிந்திருக்கும். கொனீடியா சற்று நீண்டு பெரியதாக நுனிப்பகுதியை நோக்கி மெலிந்து காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். நோயற்ற பயிரில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். தழைச்சத்து உரத்தை மூன்றாக பிரித்து இட வேண்டும். (50 சதவீதம் அடியுரமாக, 25 சதவீதம் தூர் கட்டும் பருவத்தில், 25 சதவீதம் கதிர் உருவாகும் பருவத்தில்)
நோய் தாக்குதலை தாங்கும் ரகங்களாக கோ 47, கோ52 மற்றும் வீரிய ஒட்டு கோ4 மற்றும் மிதமான எதிர்ப்பு ரகங்களான கோ50 மற்றும் கோ 51 பயிர் செய்ய வேண்டும். புழுதி நாற்றாங்காலையும், தாமதமாக நடுதலையும் தவிர்க்க வேண்டும். குலைநோய் அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடைக்கு பின் வைக்கோல் மற்றும் தூர்களை எரித்துவிட வேண்டும். சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும் (10 கிராம்/கிலோ விதை)
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் ரா.சரவணன் தெரிவித்துள்ளார்.

Next Story