சென்னையில் ஆயிரத்து 158 தெருக்களில் கொரோனா பாதிப்பு


சென்னையில் ஆயிரத்து 158 தெருக்களில் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2022 5:36 AM IST (Updated: 5 Jan 2022 5:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மொத்தம் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், ஆயிரத்து 158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ஆயிரத்து 489 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினம் பாதிப்பாகிய 876-ல் இருந்து ஒரே நாளில் 613 எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

சென்னையில் மொத்தம் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், ஆயிரத்து 158 தெருக்களில் கொரோனா பாதிப்பு உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 379 தெருக்களில் கொரோனா பாதிப்பு எவருக்கும் கண்டறியப்படவில்லை.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆயிரத்து 158 தெருக்களில், 3-க்கும் குறைவான கொரோனா தொற்று உள்ள தெருக்களின் எண்ணிக்கை 988. அடுத்ததாக, 170 தெருக்களில் 3-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 51 தெருக்களில் 5-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர்.

தேனாம்பேட்டையில் 228 தெருக்கள்...

சென்னையில் மொத்தமாக 5 ஆயிரத்து 593 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 17 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர, திருவொற்றியூர் மண்டலத்தில் 21 தெருக்கள், மாதவரம் மண்டலத்தில் 40 தெருக்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 80 தெருக்கள், ராயபுரம் மண்டலத்தில் 141 தெருக்கள், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 46 தெருக்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 24 தெருக்கள், அண்ணா நகர் மண்டலத்தில் 82 தெருக்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 115 தெருக்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 65 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 83 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 124 தெருக்கள், பெருங்குடி மண்டலத்தில் 44 தெருக்கள் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 48 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story