காய்கறி பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னேற்பாடு
காய்கறி பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னேற்பாடு
ஊட்டி, ஜன
உறைபனி தாக்கம் காரணமாக ஊட்டியில் காய்கறி பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
உறைபனி தாக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி தாக்கம் நிலவி வருகிறது. கடந்த மாதம் உறைபனி அதிகரித்த நிலையில், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது அதிகாலை நேரங்களில் மீண்டும் உறைபனி தாக்கம் காணப்படுகிறது. பச்சை பசேலன இருக்கும் புல்வெளிகள் மீது வெள்ளை நிறத்தில் உறைபனி படர்ந்து இருக்கிறது.
பனி தாக்கத்தால் புற்கள் பசுமையை இழந்து வருகிறது. ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் விவசாய விளைநிலங்களில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மீதும் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
விவசாயிகள் முன்னேற்பாடு
இதனால் பயிர்கள் காய்ந்து வறண்டு போகிறது. கருகும் அபாயம் உள்ளது. மேலும் புதிதாக விதைக்கப்படும் விதைகள் மற்றும் நாற்றுகள் முளைப்பதிலும், வளர்வதிலும் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் விதைகள் முளைக்காமல் போகும் சூழ்நிலை உள்ளது.
உறைபனியால் காய்கறி பயிர்கள் கருகுவதையும், பாதிக்கப்படாமல் இருக்கவும் விவசாயிகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக அதிகாலை, பகல், மாலையில் காய்கறி பயிர்கள் மீது ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தண்ணீர் தெளிப்பு
நிலங்களில் விதைகள் பாதிப்பு இல்லாமல் முளைக்கவும் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உறைபனி கரைந்து செல்வதோடு, பயிர்கள் பாதுகாப்பாக இருக்கும். அவலாஞ்சி வனப்பகுதியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இதனால் அவலாஞ்சி அணையில் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரின் மேல்பகுதி உறைந்த நிலையில் இருப்பதை போல் காணப்படுகிறது. மஞ்சூர் அருகே கோரகுந்தாவில் கடும் உறைபனி தாக்கம் உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் இலைகள் கருகும் அபாயம் இருக்கிறது.
அதன் காரணமாக பச்சை தேயிலை மற்றும் காய்கறி பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story