அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது


அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 5 Jan 2022 9:50 PM IST (Updated: 5 Jan 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.

தேனி:
பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அரசு நிலம் அபகரிப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர்கள் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர்.
இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், நில அளவையர்கள் மற்றும் தனிநபர்கள் என மொத்தம் 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து இந்த நிலம் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு இந்த வழக்குகள் தொடர்பாக புகார் அளித்த சப்-கலெக்டர் ரிஷப்பிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட நடவடிக்கை
இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணனிடம் கேட்டபோது, "மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்த அதே சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி.யிலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் புகார் அளித்த சப்-கலெக்டரிடம் மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. அதையடுத்து வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், தனிநபர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கு ஆஜராக தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். தவறு செய்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Next Story