மக்களின் தொடர் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்; கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை


மக்களின் தொடர் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்; கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2022 10:04 PM IST (Updated: 5 Jan 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் தொடர் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி:
மக்களின் தொடர் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, தேனி பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல் ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்கள், பஸ் பயணிகள், சாலையோர வியாபாரிகள் ஆகியோரிடம் கொரோனா வைரஸ் 3-வது அலையின் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
மேலும், கலெக்டர் முரளிதரன், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகிய இருவரும் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போதும் பொதுமக்கள் பலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை அழைத்து கலெக்டர் கண்டித்ததுடன், முக கவசம் வழங்கினார்.
மக்கள் அலட்சியம்
பின்னர் கலெக்டர் முரளிதரன் கூறுகையில், "கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆய்வுகள், அபராதம் விதிப்பு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், மக்கள் பலரும் முக கவசம் அணியாமல் அலட்சியமாக பொது இடங்களில் உலா வருகின்றனர். மக்களின் இதுபோன்ற தொடர் அலட்சியமே கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் அலட்சியத்தை கைவிட்டு, சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள் ஆகியோருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. 
இதற்கு கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story