நாமக்கல் மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 14.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 14.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2022 4:59 PM GMT (Updated: 5 Jan 2022 4:59 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 14.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி 14 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.
இறுதி வாக்காளர் பட்டியல்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 254 வாக்குச்சாவடிகளும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 279 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,627 வாக்குச்சாவடிகள் உள்ளன.
20,147 பேர் புதிதாக சேர்ப்பு
தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் 7,04,007 ஆண் வாக்காளர்கள், 7,48,038 பெண் வாக்காளர்கள், 185 திருநங்கைகள் என மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 20,147 பேர். இவர்களில் 14 ஆயிரத்து 30 பேர் 18 மற்றும் 19 வயதுடைய இளம் வாக்காளர்கள் ஆவார்கள். நீக்கம் செய்யப்பட்டவர்கள் 14,023 பேர் ஆவர். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியின்போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலோ அல்லது நகராட்சி அலுவலகங்களிலோ அளிக்கலாம்.

Next Story