தளி ஒன்றிய தி.மு.க. பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை
தளி ஒன்றிய தி.மு.க. பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி அனுராதா (வயது 40). இவர் தளி ஒன்றிய 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அனுராதா, தனது கணவர் சீனிவாசன் மற்றும் மகளுடன் ஓசூர் அருகே பஸ்தியை அடுத்த ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே அவர் கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் வீட்டில் திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓசூர் அட்கோ போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவர் உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூரில் ஒன்றிய தி.மு.க. பெண் கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story