தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்


தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்
x

தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம்,


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலத்தை சேர்ந்தவர் ரகோத்தமன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.30 ஆயிரம் பயிர் கடன் பெற்று விவசாயம் செய்தார். 

அந்த விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரால் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். இதனால் அந்த கடன் வாரா கடனாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த வாராக்கடனை வசூல் செய்வதற்காக தனியார் நிதி நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கடன் வசூலிக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இந்த சூழலில் அந்த தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி ரகோத்தமனை செல்போனில் தொடர்பு கொண்டு கடனை ஏன் கட்டவில்லை என்று கேட்டு அவரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியுள்ளார். 

அதோடு கடனை கட்டிவிட்டு செத்துப்போ என்று ரகோத்தமனை அந்த பெண் ஊழியர் ஒருமையிலும் திட்டியுள்ளார். அந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை மறியல்

இந்நிலையில் விவசாயி ரகோத்தமனை ஒருமையில் திட்டிய அந்த தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று காலை 11.15 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் விவசாயிகள் முருகையன், ரகோத்தமன், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும், தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். 

இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது                  குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் அனைவரும் காலை 11.25 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

 பின்னர் அவர்கள் அனைவரும், இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் மனு கொடுத்தனர்.

கலெக்டர் நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், தமிழகத்தின் எந்தவொரு மூலையிலும் வாங்கிய கடனை வசூலிக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளை இழிவுப்படுத்தியோ, ஒருமையிலோ யாரும் பேசக்கூடாது, இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதனிடையே அந்த நிதி நிறுவன பெண் ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முன்னோடி வங்கி மேலாளருக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடனை திரும்ப வசூலிக்கும்போது யாரிடமும் தவறான முறையில் பேசக்கூடாது, அத்துமீறியும் பேசக்கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலிவரதன், ரகோத்தமன் உள்பட 30 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், பாதிக்கப்பட்ட விவசாயி ரகோத்தமன், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர் அஸ்வினி என்பவர் மீது  திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story