தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2022 11:14 PM IST (Updated: 5 Jan 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டத்தின்பேரில் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டத்தின்பேரில் பரபரப்பு ஏற்பட்டது.
தள்ளு-முள்ளு
தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காமராஜர் சாலையில்இருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தடைந்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு சிறிது தூரம் முன்பாகவே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தடுப்புகளை அப்புறப்படுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு செல்ல முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
போராட்டக்காரர்கள் தடுப்புகளை தூக்கி எறிந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரம் நடந்த தள்ளுமுள்ளுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில் சற்று தூரம் தள்ளி மாயூரநாதர் கீழவீதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது. போராட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், மழையின் காரணமாக வேலையின்றி பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், 2020 - 2021 தவணை தொகை செலுத்தி விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், இயற்கை விவசாயி ராமலிங்கம் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story