தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Jan 2022 11:28 PM IST (Updated: 5 Jan 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

மரக்கிளை அகற்றப்பட்டது
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே கல்படி தெரு பகுதியில் சாலையோரம் மின்பாதைகளுக்கு இடையூறாக நின்ற மரக்கிளைகள் வெட்டப்பட்டது. பின்னர் அந்த மரக்கிளைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் நடந்து செல்பவர்கள் அவதிப்பட்டனர். இது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டன. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
கால்வாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்
கல்லுக்கூட்டம் பேரூராட்சி வரவுவிளை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அத்துடன், அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழிபாதை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இரவு நேரங்களில் தெருவிளக்கு சரிவர எரியாததால் இந்த பாதை வழியாக பொதுமக்களால் செல்ல இயலவில்லை. எனவே, கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து வழிபாதையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                     -ஏ.கவிதா சந்திரகுமாா், வரவுவிளை.
சுகாதார சீர்கேடு அபாயம்
குலசேகரபுரம் பஞ்சாயத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக கழிவுநீர் ஓடைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கழிவுநீர் ஓடையில் நீர் தேங்காமல் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                   -எஸ்.அய்யப்பன், குலசேகரபுரம்.
போக்குவரத்து நெரிசல்
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் ரோட்டின் ஓரம் லாரிகளை நிறுத்தி விட்டு டிரைவர்கள் சென்று விடுகிறார்கள். இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகிறார்கள்.
                                                          -பி.எஸ்.ராஜா, வெட்டூர்ணிமடம்.
நாய்கள் தொல்லை
நாகர்கோவிலை அடுத்த வேதநகர் மற்றும் சரக்கல்விளை பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் நடந்து மற்றும் வாகனத்தில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனத்தில் செல்பவர்கள் கீழே தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                 -விஜய், வேதநகர்.
மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?
பூதப்பாண்டியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை எதிரே சாலையில் மின்கம்பம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பகுதியில் வாகனத்தில் வருபவர்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தின் பின்பகுதியில் காலி இடம் அதிக அளவு உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           -எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.


Next Story