உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
உத்தராயண புண்ணிய கால உற்சவம்
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தைத் தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணிய கால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.
அபிஷேகம், அலங்காரம்
இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
கொடியேற்றம்
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை சுமார் 6.40 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... எனப் பக்திகோஷம் எழுப்பினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு கோவிலுக்கு வந்திருந்தனர்.
முன்னதாக இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி கிடையாது என்று மாவட்ட நிா்வாகம் மூலம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொடியேற்ற நிகழ்ச்சியை கண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
திருவூடல், மறுவூடல் உற்சவம்
நேற்று முதல் தொடர்ந்து 10 நாட்களும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதி உலா நடக்கிறது. 10-வது நாளான 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.
15-ந் தேதி (சனிக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story