பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் திடீர் சாவு


பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 5 Jan 2022 11:58 PM IST (Updated: 5 Jan 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் திடீரென இறந்தார்.

நாகர்கோவில்:
கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் திடீரென இறந்தார்.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரெயிலில் வந்தவர் சாவு
சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் கன்னியாகுமரிக்கு வந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கிய பிறகு தூய்மை பணி நடந்தது. அப்போது இருக்கையில் ஒரு வாலிபர் பேச்சு மூச்சு இல்லாமல் அசைவற்று கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனே கன்னியாகுமரி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாலிபரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
சப்-இன்ஸ்பெக்டரின் கணவர்
ஆனால் இறந்தவர் யார்? என்ற விவரம் முதலில் தெரியாமல் இருந்தது. தொடர்ந்து நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் மோகன் ஆகியோர் கன்னியாகுமரி சென்று வாலிபரின் உடைமைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் இறந்த வாலிபரின் ஆதார் கார்டு இருந்தது.
அதை வைத்து போலீசார் விசாரித்த போது, பிணமாக கிடந்தவர் திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த கிளாட்சன் பிரின்ஸ்லி ஜெபராஜ் (வயது 32) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி ரம்யா பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரம்யா பிரியதர்ஷினி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
விசாரணை
குமரி மாவட்டம் சுருளகோடு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தை பார்ப்பதற்காக ரெயிலில் வந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த ரம்யா பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார். உறவினர்களுடன் நாகர்கோவிலுக்கு விரைந்து வந்து 
கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story