வேலூரில் பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த பரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை


வேலூரில் பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த பரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 12:04 AM IST (Updated: 6 Jan 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த பரோட்டா மாஸ்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த பரோட்டா மாஸ்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரோட்டா மாஸ்டர்

அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் பலவன்சாத்துகுப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி மக்கான் அருகே நடந்து சென்றபோது திடீரென கீழே விழுந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், வெங்கடேசன் நடந்து வந்ததும், திடீரென கீழே விழுந்ததும் தெரியவந்தது. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் கைது

 இந்தநிலையில் பிரேத பரிசோதனையில், வெங்கடேசன் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்தது. அவர் தாக்கப்பட்டதால் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

வெங்கேடசனின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. எனவே வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு கொணவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை உள்நோயாளியாக அனுமதித்து கவனித்து வந்துள்ளார். அப்போது வெங்கடேசன், அந்த பெண்ணுக்கு சிறு, சிறு உதவிகள் செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதாக அந்தபெண் நினைத்தார்.

அடித்துக் கொலை

 இதையடுத்து அவரின் செல்போன் எண்ணை வெங்கடேசன் வேறு நபர்கள் மூலமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண்ணின் கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து வெங்கடேசன் அந்த பெண்ணை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை அவர் தனது மகன் அல்தாப் அகமதுவிடம் (33) தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அல்தாப்அகமது தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு வெங்கடேசன் வேலைபார்க்கும் ஓட்டலுக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் வெங்கடேசன் தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் கழுத்தில் ரத்தகுழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று, கால்நடை மருத்துவமனை அருகே விட்டுச் சென்றனர். அங்கிருந்து நடந்து வந்தபோது மக்கான் அருகே வெங்கடேசன் கீழே விழுந்து இறந்துள்ளார். 

இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடர்புடைய அதேபகுதியை சேர்ந்த இலாகி (33), அப்துல்ரசாக் (23) மற்றும் அல்தாப்அகமது ஆகியோரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story