கொத்தடிமை சிறுவர்கள் 7 பேர் மீட்பு-புகையிலை பொருட்களும் சிக்கின

கொத்தடிமை சிறுவர்கள் 7 பேர் மீட்பு-புகையிலை பொருட்களும் சிக்கின
x
தினத்தந்தி 5 Jan 2022 7:12 PM GMT (Updated: 5 Jan 2022 7:12 PM GMT)

பெங்களூருவில் இருந்து ராமேசுவரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த கொத்தடிமை சிறுவர்கள் 7 பேரை திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டனர். மேலும் கேட்பாரற்று கிடந்த புகையிலை பொருட்களும் மீட்கப்பட்டன.

திருச்சி, ஜன.6-

புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று முன் தினம் இரவு பெங்களூருவில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த வேளையில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு பெட்டியில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கேட்பாரற்று கிடந்தன. போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்துவதை கண்டு, அவைகளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த நபர், நைசாக நழுவிச்சென்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவற்றை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.28 ஆயிரம் ஆகும்.
7 சிறுவர்கள் மீட்பு
இதுபோல அதே ரெயிலில் 7 குழந்தை தொழிலாளர்களை அழைத்து கொண்டு 3 பேர் வந்திறங்கினர். அவர்கள் அனைவரையும் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மொத்தம் உள்ள 10 பேரில், 7 பேர் 16 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் ஆவர். அவர்களை கட்டிட பணிக்கு கொத்தடிமைகளாக அழைத்து வந்தது தெரியவந்தது. 7 சிறுவர்களும் மீட்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். புரோக்கர்களாக செயல்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story