விவசாயிகள் திடீர் சாலை மறியல்
நெல்லை அருகே விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உரம் தட்டுப்பாடு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி, அனைத்து பகுதிகளிலும் தற்போது விவசாயம் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. பல்வேறு உரக்கடைகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் இருப்பு இல்லை என்றும், சில உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் கடந்த 5 நாட்களாக தட்டுப்பாடாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சாலை மறியல்
இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு யூரியா உரம் வந்துள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து பாலாமடை, காட்டாமொழி, அருகன்குளம், ராஜவல்லிபுரம், சேந்தமங்கலம், கட்டுடையார் குடியிருப்பு, குறிச்சிகுளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 400 பேர் யூரியா உரம் வாங்க நேற்று அங்கு திரண்டனர்.
அப்போது வேளாண்மை அதிகாரிகள், தற்போது மொத்தம் 217 மூட்டைகள் மட்டுமே வந்துள்ளதாகவும், அதனால் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் யூரியா வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ராஜவல்லிபுரம் பகுதியில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை அதிகாரிகள் வயலுக்கு நேரில் சென்று தேவையான இடுபொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ராஜவல்லிபுரம்-பாலாமடை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் விவசாயிகள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சு வார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் வேளாண்மை உதவி இயக்குனரிடம் தொலைபேசியில் பேசினார்கள். அப்போது விரைவில் ராஜவல்லிபுரம் கூட்டுறவு சங்கத்திற்கு 500 மூட்டை யூரியா ஒதுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story