11 சட்டமன்ற தொகுதிகளில் 30.48 லட்சம் வாக்காளர்கள்
11 சட்டமன்ற தொகுதிகளில் 30.48 லட்சம் வாக்காளர்கள்
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 11 சட்டமன்ற தொகுதிகளில் 30 லட்சத்து 48 ஆயிரத்து 824 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
இறுதி வாக்காளர் பட்டியல்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் கார்மேகம் நேற்று வெளியிட்டார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 1-ந் தேதியை தகுதிஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 30 லட்சத்து 48 ஆயிரத்து 824 பேர் உள்ளனர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 13 ஆயிரத்து 360 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 35 ஆயிரத்து 240 பேரும், 224 திருநங்கைகளும் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்டு உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
புதிய வாக்காளர்கள்
மேலும் தற்போதைய வாக்காளர் பட்டியலில், புதிதாக 49 ஆயிரத்து 174 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 17 ஆயிரத்து 953 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. 31 ஆயிரத்து 221 வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர். இதில் 22 ஆயிரத்து 134 பேர் 18 முதல் 19 வயது வரை உள்ள புதிய வாக்காளர்கள் ஆவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story