‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் சுற்றும் கால்நடைகள்
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாசிப்பட்டணம் இடையே அதிக அளவில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவது மட்டுமின்றி விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
பள்ளமான சாலை
மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி குறுக்குதெருவில் உள்ள சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இவ்வழியாக செல்லும் போது வாகனங்களும் பழுதடைகின்றன. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?
அபுபக்கர், மதுரை.
நாய்கள் தொல்லை
மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி.நகர் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்கள் சாலைகளில் செல்பவர்களை அச்சுறுத்தியும், கடித்தும் வருகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
பொதுமக்கள் அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராம் பகுதியில் நாய்களின் தொந்தரவு அதிக அளவில் உள்ளது. நாய்கள் தொல்லையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். வாகனங்களின் குறுக்கே நாய்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
சரண்யா, கமுதி.
மின்மயானம் தேவை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் 42-வது வார்டு பகுதியில் மின்மயானம் இல்லை. இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களின் உடல்களை இறுதி சடங்கு செய்வதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே, இப்பகுதியில் மின்மயானம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஸ்டீபன்ஜேசுதாஸ், ராஜபாளையம்.
துரத்தும் வெறிநாய்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மெயின் சாலையில் வெறிநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் தெருக்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடிப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நெற்குப்பை.
Related Tags :
Next Story