விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் சின்னசாமி, துணைத் தலைவர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கோமாரி நோயால் இறந்த போன ஆடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். மேலும், கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுக்க ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி போட வேண்டும். பசு மாடுகளை பராமரிக்க மத்திய அரசு வழங்கும் வட்டியில்லாத கடன் ரூ.2 லட்சத்தை கால்நடைகள் வளர்க்கும் அனைவருக்கும் அனைத்து வங்கிகளிலும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story