பெங்களூரு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை


பெங்களூரு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2022 3:05 AM IST (Updated: 6 Jan 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெங்களூரு:

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை

  பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர ரெட்டி. இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். நேற்று மாலையில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் பகுதியில் உள்ள கோர்ட்டுக்கு ஒரு வழக்கு தொடர்பாக ராஜசேகர ரெட்டி தனது காரில் வந்திருந்தார்.

  கோர்ட்டில் வக்கீலை பார்த்து பேசிவிட்டு பின்பு அவர் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டார். பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சந்தாபுரா மெயின் ரோடு சிவாஜி சர்க்கிள் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் ராஜசேகர ரெட்டி சென்ற காரை வழிமறித்தனர்.

சுட்டுக்கொலை

  பின்னர் அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கார் கண்ணாடியை உடைத்தனர். இந்த நிலையில் காருக்குள் இருந்த ராஜசேகர ரெட்டியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

  இதில் அவரது கழுத்தில் ஒரு குண்டு துளைத்தது. அத்துடன் அரிவாளாலும் மர்மநபர்கள் ராஜசேகர ரெட்டியை சரமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ராஜசேகர ரெட்டி துடி, துடித்து உயிரிழந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

காரணம் என்ன?

  இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆனேக்கல் போலீசார் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து ராஜசேகர ரெட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜசேகர ரெட்டி இன்று (வியாழக்கிழமை) புதிதாக ஒரு இடத்தை பத்திரப்பதிவு செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக கோர்ட்டுக்கு வந்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் காரணமாகவே கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பரபரப்பு

  இதுகுறித்து ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story