அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது
ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சினிமா பாணியில் காரை துரத்திச்சென்று தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பெங்களூரு:
ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர், ராஜேந்திரபாலாஜி.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் முன்னாள் அ.திமு.க. நிர்வாகி விஜய நல்லதம்பி மூலம் தனது சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கித்தரக்கூறி ராஜேந்திரபாலாஜிக்கு ரூ.30 லட்சம் அளித்ததாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் விஜய நல்லதம்பியிடம் கடந்த ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறியும், கட்சிப்பணிக்காகவும் தன்னிடம் இருந்து ரூ.3.4 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது விஜய நல்லதம்பியும் புகார் அளித்தார். இந்த புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி அறிந்த ராஜேந்திர பாலாஜி, உடனடியாக மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஆனால் வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல்குமார், கடந்த மாதம் 17-ந் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அன்றைய தினம் விருதுநகரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜேந்திரபாலாஜி, அங்கிருந்து காரில் ஏறி தலைமறைவானார். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி உள்பட 4 பேரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை விருதுநகர் போலீசார் தீவிரப்படுத்தினர்.
மேலும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’(தேடப்படும் நபராக அறிவித்து) நோட்டீசும் அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சகோதரி மகன்களிடம் விசாரணை
இந்த நிலையில் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை விருதுநகர் மாவட்ட போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி பெங்களூரு, கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் என கர்நாடகத்தில் பல்வேறு ஊர்களில் தலைமறைவாக இருந்தார். அவர் ஒரே இடத்தில் இல்லாமல் கார்களில் சுற்றி அடிக்கடி தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். மேலும் அதிநவீன செல்போனை பயன்படுத்தினால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்று கருதி, பழைய பட்டன் செல்போன்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
காரை மடக்கிய தனிப்படை போலீசார்
இருப்பினும் அவரை தமிழக தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹாசனில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர் ஹாசனில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஹாசனில் முகாமிட்டு அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி நேற்று காலையில் ஹாசன் (மாவட்டம்) டவுன் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருப்பதாக தமிழக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பெங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலையில் காரில் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு காரில் ராஜேந்திர பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் ஹாசன் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் தான் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதிக்கு திரும்பி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை நோட்டமிட்ட தனிப்படை போலீசார் அவரது காரை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் ஹாசன் டவுனில் பெங்களூரு - மங்களூரு சாலையில் உள்ள சுங்கச்சாவடியை தாண்டி கலெக்டர் அலுவலகம் அருகே ராஜேந்திர பாலாஜியின் காரை விரட்டிச்சென்று தனிப்படை போலீசார் மடக்கினர்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திர பாலாஜியும், அவரது ஆதரவாளர்களும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை அவரது காரில் இருந்து கீழே இறக்கி கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், அவருடைய உதவியாளர் நாகேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதில் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர் தப்பிச்செல்ல வாகனம், டிரைவர், அறைகள் உள்ளிட்டவற்றை ராமகிருஷ்ணன் ஏற்படுத்தி கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ராஜேந்திர பாலாஜியுடனேயே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராமகிருஷ்ணன் இருந்து வந்ததாகவும் போலீசார் கூறினர்.
மருத்துவ பரிசோதனை
பின்னர் கைதான ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தங்களுடைய காரில் ஏற்றிச்சென்றனர். அவர்கள் 4 பேரையும் ஹாசன் டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதையடுத்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரையும் ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா உதவியுடன், ஹாசன் மாவட்ட கோர்ட்டில் தமிழக தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர்.
அதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி விருதுநகர் நோக்கி புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமா பாணியில் நடந்த இந்த கைது நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவி வேட்டி-டீ சர்ட் அணிந்திருந்த ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க. கட்சிநிற பார்டர் போட்ட வேட்டி, வெள்ளை சட்டையுடன் வெளி இடங்களில் வருவார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மஞ்சள் நிற சட்டை அணிந்திருந்தார்.
இந்த நிலையில் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே நேற்று விருதுநகர் தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அந்த சமயத்தில் ராஜேந்திர பாலாஜி காவி வேட்டி, டீ-சர்ட் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாசனில் பதுங்கி இருந்தார்
மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹாசன் (மாவட்டம்) டவுனில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 3 நாட்களாக பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில் அவர் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பியபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடத்தப்பட்டதாக பரபரப்பு
ஹாசனில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜியை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மடக்கினர். பின்னர் ராஜேந்திர பாலாஜியையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தனர். பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் ஏதோ கடத்தல் சம்பவம் தான் நடைபெறுகிறது என்று கருதி பீதி அடைந்தனர். பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து அறிந்து கொண்டனர்.
Related Tags :
Next Story