தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை; கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை; கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 6 Jan 2022 5:41 PM IST (Updated: 6 Jan 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்த சுகாதார பேரவை கூட்டத்தில், மாவட்டத்தில் சுகாதார குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
சுகாதார பேரவை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட வழிகாட்டு குழு மற்றும் செயல்பாட்டு குழுவில் உள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் இருந்தும், வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் அந்தந்த வட்டாரத்தில் இருந்தும் பங்கேற்கும் படியாக காணொலி மூலம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
நல்லுறவு
கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, பொது சுகாதாரத்துறையின் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். எனவே அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டுக்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டு சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கமாகும்.
தீர்வு
கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் சுகாதார பேரவைகள் கிராம ஊராட்சி மற்றும் வட்டார அளவிலும் நடைபெற்றன. அதில் சுகாதாரதுறை அலுவலர்களுடன், பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழு தன்னார்வலர்களும் பங்கேற்று தங்களது சுகாதார தேவைகள், சுகாதார சேவைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த சேவைகளாகிய அங்கன்வாடி சேவைகள் மற்றும் பள்ளிசுகாதாரம் குறித்து கலந்துரையாடினர். இதன் அடிப்படையில் ஊராட்சி தலைவர், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் மாவட்ட சுகாதார பேரவையில் விவாதிக்கப்பட்டது. விவாதிக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களில் மாவட்ட அளவில் நிவர்த்தி செய்யப்படக் கூடிய குறைகளுக்கு இந்த பேரைவையின் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட அளவில் நிவர்த்தி செய்யப்பட இயலாத குறைகள், முதல்-அமைச்சரின் தலைமையில் நடைபெற உள்ள மாநில சுகாதார பேரவையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பயிற்சி) மதுசூதனன், புதுடெல்லி சமூக நடவடிக்கைக்கான ஆலோசனைக்குழு தமன் அஹஜா, மாவட்ட திட்ட அலுவலர் லீலா பிரியதர்சினி, இணை இயக்குனர் (நலப்பணிகள்) முருகவேல், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பொற்செல்வன் (தூத்துக்குடி), போஸ்கோராஜா (கோவில்பட்டி), துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் மற்றும் குடும்பநலம் பொன்இசக்கி, தொழுநோய் மற்றும் காசநோய் துணை இயக்குனர் சுந்தரலிங்கம், தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story