போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது; கடிகார கடையில் ரூ.22 ஆயிரம் மோசடி


போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது; கடிகார கடையில் ரூ.22 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 6 Jan 2022 7:32 PM IST (Updated: 6 Jan 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறில் கடிகார கடையில் ரூ.22 ஆயிரம் மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

கடிகார கடையில் மோசடி

சென்னை அடையாறு எல்.பி.சாலையில் சத்யா டைம்ஸ் என்ற கடிகார கடை உள்ளது. இந்த கடைக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் டிப்-டாப்பாக நபர் ஒருவர் வந்தார். ரூ.22 ஆயிரத்துக்கு 2 கைக்கடிகாரங்கள் வாங்கினார். தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்வதாகவும், அருகில்தான் தனது வீடு உள்ளது என்றும், கடை ஊழியரை தன்னுடன் அனுப்பி வைத்தால் ரூ.22 ஆயிரத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதை நம்பி கடை ஊழியர் ஒருவர் அவருடன் சென்றார்.

சற்று தூரம் சென்றதும், கடை ஊழியரை ஏமாற்றி விட்டு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருந்த நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருவான்மியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலி சப்-இன்ஸ்பெக்டர்

போலீஸ் விசாரணையில், கடிகாரம் வாங்கி விட்டு தப்பி ஓடிய நபர் போலி சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரிய வந்தது. அவரது பெயர் சிவா (வயது 40) . அவர் சிவகுமார், ஜோஸ்வா என்ற பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் சென்று பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

சென்னை வடபழனி, சங்கர்நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளது. போலி சப்-இன்ஸ்பெக்டர் சிவா நேற்று கைது செய்யப்பட்டார்.


Next Story