பஞ்சாப் முதல்-மந்திரியை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் உருவபொம்மை எரிப்பு
தேனியில் பா.ஜ.க. சார்பில் பஞ்சாப் முதல்-மந்திரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது.
தேனி:
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது அந்த பாதையில் சிலர் சாலை மறியல் செய்தனர். இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக விழாவை ரத்து செய்து விட்டு மோடி திரும்பி சென்றார். இந்த பாதுகாப்பு குறைபாடு எதிரொலியாக பஞ்சாப் மாநில முதல்-மந்திரி சரண்ஜித் சிங்கை கண்டித்தும், அவரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க.வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க.வினர் தீப்பந்தம் ஏந்தியபடி பஞ்சாப் மாநில முதல்-மந்திரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவர்கள் பஞ்சாப் முதல்-மந்திரி உருவபொம்மையை எரித்தனர். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் தங்களை விமர்சித்துவிட்டதாக கூறி, பா.ஜ.க.வினர் திடீரென போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பழைய பஸ் நிலையம் முன்பு கம்பம் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பா.ஜ.க.வினர் மறியலை கைவிட்டு சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story