திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 54 ஆயிரம் வாக்காளர்கள்: கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்
திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 53 ஆயிரத்து 971 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் 2022- ஐ மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1-1-2022-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் 2022 வெளியிடப்பட்டது.
பொதுமக்களின் பார்வைக்கு
மேற்படி இறுதி வாக்காளர் பட்டியல் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி, அம்பத்தூர் மற்றும் மண்டல அலுவலர் 1 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அம்பத்தூர் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களான தாசில்தார் அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்ளூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 3 ஆயிரத்து 657 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1290 பள்ளிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் 2022- ஐ பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022-ன்படி வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த 1-11- 2021 முதல் 30- 11- 2021 வரை வரப்பெற்ற 68 ஆயிரத்து 736 மொத்த விண்ணப்பங்களில் 65 ஆயிரத்து 902 விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டு, மீதமுள்ள 2 ஆயிரத்து 834 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
35 லட்சத்து 53 ஆயிரத்து 971 வாக்காளர்கள்
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 2022-ன்படி வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:-
கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 46 ஆயிரத்து 339 பெண் வாக்காளர்களும், 41 இதரர் உட்பட மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 538 பேர் உள்ளனர்.
பொன்னேரி (தனி) தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 690 பெண் வாக்காளர்கள், இதரர் 36 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 616 பேர் உள்ளனர்.
திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 151 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 51 ஆயிரத்து 303 பெண் வாக்காளர்களும், இதரர் 27 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 481 பேரும் உள்ளனர்.
திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 420 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 43 ஆயிரத்து 75 பெண் வாக்காளர்கள், இதரர் 29 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.
பூந்தமல்லி (தனி) தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 650 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 85 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்களும், இதரர் 66 பேர் உள்பட மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 121 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 46 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 27 ஆயிரத்து 113 பெண் வாக்காளர்களும், 105 இதரர் என மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரத்து 264 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 933 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 26 ஆயிரத்து 777 பெண் வாக்காளர்களும், 148 இதரர் என மொத்தம் 4 லட்சத்து 56 ஆயிரத்து 858 வாக்காளர்கள் உள்ளனர்.
அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 632 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 92 ஆயிரத்து 408 பெண் வாக்காளர்களும், இதரர் 93 பேர் என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர்.
மாதவரம் தொகுதியில 2 லட்சத்து 28 ஆயிரத்து 734 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 31 ஆயிரத்து 754 பெண் வாக்காளர்களும், இதரர் 112 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவொற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 56 ஆயிரத்து 143 பெண் வாக்காளர்களும், இதரர் 145 பேர் என மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 836 வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 17 லட்சத்து 54 ஆயிரத்து 162 ஆண் வாக்காளர்களும், 17 லட்சத்து 99 ஆயிரத்து 7 பெண் வாக்காளர்களும், இதரர் 802 பேர் என மொத்தம் 35 லட்சத்து 53 ஆயிரத்து 971 வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆயிரத்து 657 வாக்குச்சாவடி மையங்கள்
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் விவரம்.
கும்மிடிப்பூண்டியில் 330, பொன்னேரியில் 311, திருத்தணியில் 330, திருவள்ளூரில் 296, பூந்தமல்லியில் 387, ஆவடியில் 436, மதுரவாயலில் 440, அம்பத்தூரில் 349, மாதவரத்தில் 467, திருவொற்றியூரில் 311 என மொத்தம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 657 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
மேலும் 1- 1-2022-ந் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படாமல் இருந்தால் தற்போது புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6 ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7 ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் படிவம் 8-ம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புபவர்கள் படிவம் 8-ஏவும், இன்று முதல் 6ம் தேதி அனைத்து அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் படிவங்களை பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களின் நகல்களுடன் மனு அளித்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் இணையதளத்தில் மூலமாகவும், மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தேர்தல் தனி தாசில்தார் கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story