தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு; தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலை விரிவாக்கம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் தனியார் இரும்பு தொழிற்சாலைக்கான விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மனு அளித்திருந்தனர். மேலும், தொழிற்சாலை வளாகத்தில் நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக சமாதான கூட்டமும் நடைபெற்று அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
முற்றுகை
இந்த நிலையில் மேற்கண்ட இரும்பு தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக மீண்டும் தாசில்தார் மகேஷிடம் மனு ஒன்றை அவர்கள் அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story