சுங்கச்சாவடியை முழுமையாக அகற்றக்கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்
பொங்கலூர் அருகே வேலம்பட்டியில் செயல்பாட்டுக்கு வர உள்ள சுங்கச்சாவடியை முழுமையாக அகற்றக்கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பொங்கலூர்
பொங்கலூர் அருகே வேலம்பட்டியில் செயல்பாட்டுக்கு வர உள்ள சுங்கச்சாவடியை முழுமையாக அகற்றக்கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முற்றுகை
அவினாசி முதல் அவினாசிபாளையம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு எண் 381 தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க பொங்கலூர் அருகே வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை விரைவில் திறந்து சுங்கம் வசூலிக்கும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கு விவசாயிகள், வியாபாரிகள் உள்பட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஜனவரி 6-ந் தேதி (நேற்று) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை சுமார் 11 மணி அளவில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா, உழவர் உழைப்பாளர் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, வியாபாரிகள் சங்கம், இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்பினர் திரண்டு சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.
ஆக்கிரமிப்பு
அப்போது நான்கு வழிச்சாலை அமைத்து இருப்பதாக கூறி நிறைய இடங்களில் நடைபாதை கூட அமைக்காமல், அகலத்தை சுருக்கியும், இருவழி பாதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. 32 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் திருப்பூர் மாநகருக்குள் செல்கிறது. அதற்கு ஏன் சுங்கம் செலுத்த வேண்டும்?.
மேலும் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ள பகுதி நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பினார்கள்.
கலந்து கொண்டவர்கள்
முற்றுகைப் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து, வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிட்டு என்கிற கிருஷ்ணசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன், கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் யு.எஸ். பழனிசாமி, காட்டூர் சிவப்பிரகாஷ், அ.தி.மு.க. வேலன் தங்கவேல், ஊட்டி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய தயார் நிலையில் போலீசார் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
Related Tags :
Next Story