தமிழக அரசியல் கட்சிகளை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழக அரசியல் கட்சிகளை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது என முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார்.
கோட்டூர்:-
தமிழக அரசியல் கட்சிகளை மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது என முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார்.
முத்தரசன் பேட்டி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் முன்னாள் எம்.பி. முருகையன் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் உச்சபட்சமாக தமிழக சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதி வரை சென்று மனு அளித்து உள்ளனர்.
வரவேற்பு
உள்துறை மந்திரியை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் 2 முறை முயற்சி எடுத்தனர். ஆனாலும் இதற்கு உள்துறை மந்திரி செவிசாய்க்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளையும், எம்.பி.க்களையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. இது மோசமான நிலை. இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு வரவேற்கிறது.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக கடுமையான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவளிக்கும்.
காலிப்பணியிடங்கள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முதல்-அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அரசுப்பணியில் உள்ள பெரும்பாலானோர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என்றும் எதிர்பார்த்தோம்.
தேர்தல் வாக்குறுதியின்படி பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது செல்வராஜ் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story