இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன


இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன
x
தினத்தந்தி 6 Jan 2022 11:15 PM IST (Updated: 6 Jan 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் கடைகள், ஓட்டல்கள் முழுவதும் அடைக்கப்பட்டன.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் கடைகள், ஓட்டல்கள் முழுவதும் அடைக்கப்பட்டன.
50 சதவீதம் பேர்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முதல் இரவு ஊரடங்கை அரசு அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக காலையில் பஸ்களில் 50 சதவீத பயணிகள் அமர்ந்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டது. பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிந்து செல்ல அறிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டனர். துணிக்கடைகள், நகைக்கடைகளில் ஒரேநேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் இருக்கும் வகையில் அனுமதித்தனர். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடைகள் அடைப்பு
நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி திருப்பூர் மாநகரில் நேற்று இரவு 7 மணி முதல் பிரதான சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்தது. பணி முடிந்து வீட்டுக்கு முன்கூட்டியே செல்ல ஊழியர்கள், தொழிலாளர்கள் சென்றதால் சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகன நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. அதுபோல் டவுன் பஸ்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கடைவீதிகளில் பொருட்களை வாங்கவும் அதிகம் பேர் குவிந்தனர். 
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் இரும்பு தடுப்பு அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நேற்று மாலையிலேயே செய்திருந்தனர். அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்படவில்லை. போலீசார் கடைகளை அடைக்க அறிவுறுத்தினார்கள்.
போலீசார் எச்சரிக்கை
பால்வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டன. போலீசார் இரவு ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினார்கள்.
தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்தது. முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளிலும் வாகன தணிக்கை நடந்தது. பொது போக்குவரத்துக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தொலைதூர அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story