பொங்கல் வாழ்த்து அட்டையை மறக்க முடியுமா


பொங்கல்  வாழ்த்து  அட்டையை  மறக்க முடியுமா
x
தினத்தந்தி 6 Jan 2022 11:19 PM IST (Updated: 6 Jan 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் வாழ்த்து அட்டையை மறக்க முடியுமா

சேவூர்
தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத திருநாள் பொங்கல் திருநாள். பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது மஞ்சள், செங்கரும்பு, பொங்கல் மற்றும் மங்கல பொருட்கள்தான். சுவைத்தால் இனிப்பது செங்கரும்பு. ஆனால் நினைத்தாலே இனிப்பது பொங்கல் வாழ்த்து அட்டை அல்லவா.
பொங்கல் வாழ்த்து அட்டைக்கு தனி மகத்துவம் அன்று இருந்தது. ஆனால் இன்று செல்போனை எடுத்தால் அடுத்த நொடியில் உலகில் எந்த மூலையில் இருப்பவரிடமும் பேசலாம். டுவிட்டர், வாட்ஸ் ஆப், மெயில், ஸ்கைப், பேஸ்புக், குறுந்தகவல், வீடியோ கால் இன்னும் என்னென்னவோ இருக்கு. ஆனாலும் மகிழ்ச்சி நம்மை ஆட்கொண்டதா இல்லையே.இதை அனைத்தும் வாழ்த்து அட்டைக்கு ஈடாகுமா.
வாழ்த்து அட்டையின் வாசகம் மட்டுமல்ல. அதில் இருக்கும் ஓவியம் மன ஓட்டத்தை அல்லவா படம் பிடித்து காட்டியது.நண்பர்களிடம் இருந்தோ, தோழிகளிடம் இருந்தோ பொங்கலுக்கு வாழ்த்து அட்டை வந்து விட்டால், அன்று உட்காகார நேரமேது. அந்த அட்டையை அனைவரிடமும் காண்பித்தால் தான் நிம்மதி. அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையே. வாழ்த்து அட்டையில் உள்ள ஒவ்வொரு ஓவியமும் அவர்களின் எதிர்கால காவியத்தை அல்லவா பறைசாற்றியது. எப்போது தபால்காரர் வருவார், நமக்கு வாழ்த்து அட்டை தருவார் என தபால்காரரை வழி மேல் விழி வைத்து வாழ்ந்த காலம் வசந்த காலம் அல்லவா. அந்த காலத்தை நினைத்தாலே இனிக்குதே.கடந்த கால நினைவுகளே நிகழ்காலத்தை இயக்குகிறது. ஆனால் காலசக்கரம் அவற்றை காணமல் ஆக்கி விட்டதே. கோடி கொடுத்தாலும் அந்த இன்பத்திற்கு ஈடாகுமா.
காணாமல் போனவர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்த தபால், தந்தி, ரேடியோ,  கோலிக்குண்டு, வாக்மேன் வரிசையில் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் இடம் பிடித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. பொங்கலுக்கு வாழ்த்து அனுப்புதல் என்பது 20 ஆண்டுக்கு முன்பு வரை, முக்கியக் கடமையாக கருதப்பட்டது.
சாதாரண வாழ்த்துக்களா அவை. தேடித்தேடி பிடித்த அழகழகான படத்துடன் ஒரு அட்டையை வாங்கி, அதில் வெறும் பெயரை மட்டுமே எழுதுவது போதாது என்று மனதுக்குப் பிடித்த வாசகங்களையும், சொல்ல விரும்பும் செய்திகளையும் மாய்ந்து மாய்ந்து எழுதிய காலம். அம்மாவின் பாசம், அப்பாவின் அறிவுரை, அத்தை, மாமாவின் கரிசனம், நண்பனின் நக்கல். இப்படி எத்தனை உணர்வுகளை அவை தாங்கி வந்தன. அட்டையிலேயே துணுக்குகள், ஜோக்குகள், குட்டிக்குட்டி கவிதைகள், ஊர் நடப்புகள், அவரவருக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்கள், இயற்கை காட்சிகள், சாமி படங்கள், அரசியல் தலைவர் படங்கள் என பலதரப்பட்ட மாடல்களில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி பொங்கல் வாழ்த்து எழுதி ஸ்டாப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டு அனுப்புவதில் இருந்த மகிழ்ச்சி அளவற்றது.
பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பொங்கல் வாழ்த்து வரும் என தபால்காரரை எதிர்பார்த்து காத்திருந்து, தபால்காரர் கொடுக்கும் பொங்கல் வாழ்த்தை பிரித்து பார்த்து மகிழ்ச்சியடைந்த நாட்களை மறக்க முடியுமா. அப்படியே வாழ்த்து அட்டை வந்து விட்டால் அந்த அட்டையுடன் வானத்திற்கும், பூமிக்கும் இடையில் குதிக்க அல்லவா செய்தார்கள். கோவில்மாடுகளை அவர்களின் மனம் கட்டவிழ்ந்து அழைந்தது அன்றோ. இன்றும் மறவாமல் அந்த பழைய பொங்கல்வாழ்த்து அட்டையை பாதுகாத்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நினைவுபடுத்தி மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.இன்றைய நாகரீக காலத்தில் பொங்கல் பண்டிகை தொடங்கும் முதல் நாளில் செல்போனை எடுத்து வாட்ஸ் ஆப் குருப்பிற்கு சென்று பொங்கல் வாழ்த்து என்ற ஒரு வாசக்தை போட்டுவிட்டு தொலைக்காட்சிக்கு முன் சிறப்பு நிகழ்ச்சி பார்க்கும் இன்றைய நாட்களில் "பொங்கல் வாழ்த்து அட்டை " என்ற அற்புதமான வழக்கத்தை நாம் அனைவரும் இழந்து விட்டோம் என்பதை மறுக்க முடியாது.

Next Story