கல்லூரிகளுக்கு விடுமுறை எதிரொலி: நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய மாணவ, மாணவிகள் கூட்டம்


கல்லூரிகளுக்கு விடுமுறை எதிரொலி: நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய மாணவ, மாணவிகள் கூட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2022 11:55 PM IST (Updated: 6 Jan 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் நாமக்கல் பஸ் நிலையத்தில் மாணவ, மாணவிகள் கூட்டம் அலை மோதியது.

நாமக்கல்:
கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் நாமக்கல் பஸ் நிலையத்தில் மாணவ, மாணவிகள் கூட்டம் அலை மோதியது.
கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. அதன்படி மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நேற்று காலை முதலே மாணவ, மாணவிகள் விடுதிகளை காலி செய்து விட்டு, தங்களது உடமைகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.
இரவு நேர ஊரடங்கு அமல்
இதேபோல் அழகு நிலையங்கள், சலூன்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும் அரசு அறிவித்து உள்ளது. இதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று இரவு 10 மணி முதல் நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் 10 மணிக்கு முன்னதாகவே வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மூடப்பட்டன. எனவே இரவு 10 மணிக்கு மேல் சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்தும் மிகவும் குறைவாகவே இருந்தது.

Next Story