கள்ளக்காதல் விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்து கணவனை கொன்ற பெண். தந்தை உள்பட 5 பேர் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்து கணவனை கொன்ற பெண். தந்தை உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2022 11:59 PM IST (Updated: 6 Jan 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்து கூலிப்படை அமர்த்தியதாக கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்து கூலிப்படை அமர்த்தியதாக கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சாமிபிள்ளை. இவரது மகன் அன்பழகன் (வயது45) டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரிதா (35). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்தனர். தனியாக வசித்து வந்த அன்பழகன் நேற்று முன்தினம் காட்டுக்கொல்லை பகுதியில் பிணமாக கிடந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அன்பழகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி சரிதா உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரது மனைவி சிலருக்கு முன்பணம் கொடுத்து கணவன் அன்பழகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சரிதாவை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பு

அவரிடம் நடந்த விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
கணவர் அன்பழகன் சிபிலா என்கின்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். எனது கணவர் கட்டுக்கொல்லை பகுதியில் நிலம் வாங்கி தனியாக வீடு கட்டி வாழ்ந்து வந்தார். எங்களது மகன்கள் தென்னரசு, பூவரசன் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் வேலை செய்து அனுப்பும் பணம் மற்றும் நகைகளை எனது கணவர் வைத்துக்கொண்டார்.
நான் புதிதாக 4 சென்ட் நிலம் வாங்க முன் பணம் கட்டியுள்ளேன். மீதமுள்ள பணத்தை எனது கணவரிடம் கேட்டபோது தர முடியாது என கூறினார்.

இதனால் எனது தந்தை சின்னபையன் தகவல் தெரிவித்து கணவரை கொலை செய்ய ஒரு மாதத்திற்கு முன்பு திட்டம் தீட்டினேன். ஏற்கனவே 10 நாளுக்கு முன்பு கூலிப்படை அமைத்து 4 பேரை வரவழைத்து கல்லை தூக்கி வீசி கொலை செய்ய முயன்ற போது சத்தம் கேட்டு எனது கணவர் சுதாரித்துக்கொண்டு தப்பித்து விட்டார்.
இதனை தொடர்ந்து செந்தில் குமார் என்பவர் மூலம் கொலையாளிகளுக்கு ரூ.2½ லட்சம் கொடுப்பதாக பேரம் பேசி முன் பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்து கொலைக்கு தூண்டினோம்.

மப்ளரால் இறுக்கினோம்

நேற்று முன்தினம் மொபட்டில் 3 பேர் சென்று எனது கணவரின் கழுத்தில் மப்ளர் மூலம் இறுக்கியபோது எனது கணவர் சாகவில்லை. இதனால் தயிர்கடையும் மத்து கோலால் கழுத்து பகுதியில் அவர்கள் தாக்கினர். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அன்பழகனை கொலை செய்தோம்.
மேற்கண்ட தகவல்கள் சரிதாவிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையே சரிதா வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதனை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய சரிதாவின் தந்தை சின்னபையன் (66), ஜெயபுரம் காலணி பகுதியை சேர்ந்த முனிசாமி மகன் செந்தில் குமார் (39), அமாவாசை மகன் அரவிந்தகுமார் (25), ராமநாயக்கன்பேட்டையை சேர்ந்த சந்திரன் மகன் சந்தீப் என்கின்ற மிட்டா (19) ஆகியோைர போலீசார் கைது செய்தனர்.
கைதான சரிதா உள்பட 5 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய கரியா என்கின்ற கோபிநாத் மற்றும் பிரதீப் ஆகிய 2 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story