நெல்லையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன; கல்லூரி விடுதி- பயிற்சி மையங்கள் மூடல்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக நெல்லையில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி கல்லூரி விடுதிகள், பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டன.
நெல்லை:
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக நெல்லையில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி கல்லூரி விடுதிகள், பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டன.
கொரோனா பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அரசு கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
கல்லூரி விடுதிகள் மூடல்
இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் மட்டும் வந்தனர். விடுதியில் தங்கி படித்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். கல்லூரி விடுதிகள் மூடப்பட்டன.
அரசு மருத்துவக்கல்லூரி, சித்த மருத்துக்கல்லூரி ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன. அங்கு தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி நடந்தது. தொழில்நுட்ப படிப்பு மற்றும் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. நெல்லை மாநகரில் வ.உ.சி. மைதானத்தில் உள்ள சிறுவர் பூங்கா உள்பட பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் அடைக்கப்பட்டன. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள அறிவியல் பூங்காவும் மூடப்பட்டது.
50 சதவீத வாடிக்கையாளர்கள்
இதுதவிர அனைத்து ஓட்டல்கள், சலூன் கடைகள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.
பெண்கள் அழகு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டனர். சினிமா தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது.
வாக்குவாதம்
அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வாறு கூட்டம் அதிகமாக இருந்த பஸ்களில், பயணிகளிடம் அடுத்த பஸ்சில் வருமாறு டிரைவர், கண்டக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் சில இடங்களில் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில பஸ்களில் கூடுதலாக பயணிகள் இருந்தனர். பஸ்களில் பெரும்பாலான பயணிகள் முககவசம் அணிந்து இருந்தனர்.
நெல்லை மாநகர பகுதிகளில் நேற்று போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைவரும் முககவசம் அணிந்து பணியாற்றுகிறார்களா? என்று கண்காணித்தனர். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story