தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேங்கை மண்டலம் காலனி பகுதியில் சுமார் 6 மின்கம்பங்கள் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கின்றன என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பங்களை அமைத்தனர். இதற்கு அப்பகுதி செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், வேங்கைமண்டலம் காலனி, திருச்சி.
புறக்காவல் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூரில் புறக்காவல் நிலையம் உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் காவல் நிலையம் செல்ல வேண்டுமானால் மங்களமேடு அல்லது குன்னம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர். எனவே சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாத்திட அகரம்சீகூர் புறக்காவல் நிலையத்தை போலீஸ் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேந்திரன், அகரம்சீகூர், பெரம்பலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி தென்னூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன். இவற்றை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தென்னூர், திருச்சி.
தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கழுகூர் ஊராட்சி மூட்டக்காம்பட்டியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை இப்பகுதியில் நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், பெண்களை கடிக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. மேலும் தெருநாய்கள் கூட்டமாக சாலையில் நிற்பதினால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சாலையில் சென்று வருகின்றனர். சில தெரு நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முகமதுகாசிம், மூட்டக்காம்பட்டி, கரூர்.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
திருச்சி தென்னூர் அண்ணாநகர் அக்பர் தெருவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பெரிய சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராயல்சித்திக், ஆழ்வார்தோப்பு, திருச்சி.
குரங்குகளால் தொல்லை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கூத்தங்குடி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் அங்குள்ள வீடுகளில் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து மளிகை பொருட்களை நாசம் செய்கின்றன. அதுமட்டுமின்றி தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து சாலையோரத்தில் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் மீது எறிந்து பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. எனவே இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொய்யாமொழி , கூத்தங்குடி, அரியலூர்.
எலும்புக்கூடான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, திருநல்லூர் கிராமம், நாச்சிக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நாச்சிக்குறிச்சி, புதுக்கோட்டை.
கீழே விழும் நிலையில் உள்ள மரம்
திருச்சி உறையூர் நாச்சியார் ரோடு போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் அருகே மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி கரையான்கள் அரித்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உறையூர், திருச்சி.
ஏரி, குளங்கள் தூர்வாரப்படுமா?
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வே.மணியம்பட்டி கிராமத்தில் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலும், தூர்வாரப்படாமலும் உள்ளதால் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழைபெய்யும்போது மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு தற்போது இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வழிவகைசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வே.மணியம்பட்டி, திருச்சி
குண்டும், குழியுமான சாலை
திருச்சி-மணப்பாறை செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
Related Tags :
Next Story