தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்து குவிந்துள்ள கரும்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்காக கரும்பு குவிந்து உள்ளது.
கும்பகோணம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்காக கரும்பு குவிந்து உள்ளது.
விற்பனைக்கு வந்த கரும்பு
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.
இதற்காக ஏராளமான விவசாயிகள் பொங்கல் கரும்புகளை பயிர் செய்து பொங்கலின்போது அறுவடை செய்து விற்பனையில் ஈடுபடுவார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாராசுரம் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக கரும்பை கொண்டு வந்து குவித்துள்ளனர்.
2 ஆண்டுகளாக விற்பனை சரிவு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொங்கல் கரும்பு விற்பனை சரிவடைந்து வந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் கரும்புக்கு நல்ல விலை கிடைக்குமென எதிர்பார்ப்பதாக கரும்பு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாராசுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பெண் வியாபாரி லட்சுமி கூறியதாவது:-
நல்ல விலைகிடைக்குமென எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்து தாராசுரம் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் கரும்பு நல்ல விலைக்கு விற்பனை ஆனது. இதனால் கரும்பு விவசாயிகளிடம் நல்ல விலைக்கு கரும்புகளை வாங்கி வந்து நல்ல லாபத்துடன் விற்பனை செய்து வந்தோம்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கரும்பு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் சரிவடைந்தது. இதனால் எங்களைப் போன்ற கரும்பு வியாபாரிகளுக்கு உரிய லாபம் கிடைக்காமல் போனது. எனவே வியாபாரிகளும் கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை கொடுக்க முடியாமல் போனது. இந்த ஆண்டு கரும்பு நல்ல விலைக்கு விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
மீண்டும் ஊரடங்கால் கலக்கம்
ஆனால் தற்போது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்த கரும்பை கிடைத்த விலைக்கு விரைவில் விற்று தீர்த்துவிட வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் அரசின் கட்டுப்பாடுகளால் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் பொதுமக்களிடம் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே நாட்கள் நெருங்க, நெருங்க கரும்பு வியாபாரம் சூடுபிடிக்குமா? அல்லது சரிவடையுமா? என்பது தெரியவில்லை. வியாபாரிகள் கொள்முதல் செய்த விலைக்கு கரும்பு விற்பனை நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். விற்பனையில் சரிவு ஏற்பட்டால் அரசு உரிய இழப்பீடு வழங்கி வியாபாரிகளை பெரும் இழப்பில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story