இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது


இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 7 Jan 2022 1:56 AM IST (Updated: 7 Jan 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவத்தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமல்
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இருந்தது. இதையடுத்து இரவு 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. 
பெட்ரோல் விற்பனை நிலையங்கள், , மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆஸ்பத்திரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன. இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
தஞ்சை ெரயில் நிலையம், காந்திஜி சாலை, பழைய பஸ் நிலையம், பர்மா பஜார், தெற்கு அலங்கம், தெற்கு வீதி, கீழ அலங்கம், மருத்துவக்கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், ராமநாதன் ரவுண்டானா, கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு 9.30 மணி முதல் கடைகளை அடைக்க தொடங்கினர். 
இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலையோரங்களில் செயல்பட்டுவந்த இரவு நேர டிபன் கடைகளும் 10 மணிக்கெல்லாம் முடித்துக்கொண்டு கிளம்பினர். ஒரு சில கடைகள் திறந்து இருந்தன. போலீசார் ரோந்து வருவதை பார்த்ததும் அவர்கள் கடைகளை அடைத்து கொண்டு கிளம்பினர்.
பஸ்கள் இயங்கின
இரவு நேரங்களில் பொதுப்போக்குவரத்து சேவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. நகர பஸ்களும் வழக்கம் போல இயங்கின.

Next Story